நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் பிரச்சனை முடிந்து போன விவகாரம் என்றும், அவரது புதிய படத்திற்கு எதிராக, பா.ம.கவினர் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் பா.ம.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாயாஜால் திரையரங்கில் மட்டும் 69 காட்சிகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கான முன்பதிவில் விறுவிறுப்பு இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில், படத்தை திரையிட வேண்டாம் என்று கடலூரில் பா.ம.க மாணவர் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கடிதம் கொடுத்ததால், வட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் சூர்யாவின் படத்துக்கு சிக்கல் உருவாகும் என்று கூறப்பட்டது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே திருமாவளவனுக்கு பதில் அளிக்கும் வகையில், சூர்யாவுடனான ஜெய்பீம் பிரச்சனை முடிந்து போன விவகாரம் என்றும், தங்கள் கட்சியினர் எவரும் திரையரங்குகளில் பிரச்சனை செய்யமாட்டார்கள் என்றும் பா.ம.க தரப்பில் இருந்து வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவின் படத்தை விளம்பரப்படுத்த தாங்கள் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வட மாவட்டங்களில் சில திரையரங்குகளில், எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளை அப்படத்திற்கு ஒதுக்கி வசூலை அள்ளிவிடலாம் என்று கனவு கண்ட திரையரங்கு உரிமையாளர்கள், முன்பதிவு விறுவிறுப்படையாத காரணத்தால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை சத்தியம் திரையரங்கில் காலை 11:45 மணி காட்சிக்கு 20 சதவீதம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாயாஜால் திரையரங்கில் முதல் நாளில் 69 காட்சிகள் வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில் 2 காட்சிகளுக்கு மட்டுமே 80 சதவீத இருக்கைகள் முன்பதிவாகி உள்ளது. மற்ற காட்சிகளுக்கு சொற்ப அளவே முன்பதிவாகி உள்ளது.
மதுரவாயல் மற்றும் வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ், ஆற்காடு சாலை ஐனாக்ஸ், ஓ.எம்.ஆர் ஐனாக்ஸ், குன்றத்தூர் பரிமளம், மடிப்பாக்கம் வெற்றிவேல், மேடவாக்கம் குமரன் திரையரங்கு ஆகியவற்றில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் பல காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வழக்கமான கட்டணத்திற்கே எதற்கும் துணிந்தவன் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த திரையரங்கிற்கு சென்று விசாரித்த போலீசார் அங்கு பெயருக்கு கூட ரசிகர் என்று ஒருவர் கூட இல்லாததால் படம் வெளியான பின்னர் வந்து புகார் அளிக்குமாறு திருப்பி அனுப்பி உள்ளனர்