கீவ்,
உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் செர்னோபில் அணு உலை பகுதியை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இந்த நிலையில் செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ‘ரஷியாவின் இந்த ஆபத்தான நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது’ எனக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, ரஷியப் படைகள் செர்னோபிலைக் கைப்பற்றியபோது அங்கிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியாவதாக உக்ரைன் அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.