நேற்று முடிந்த 5 மாநில தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களும், காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்களும் அடுத்தடுத்து நடக்க உள்ளன. அதனால், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜ.வுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சிகளுக்கும் வெற்றி கிடைத்திருந்தால் பாஜ.வின் ஆதிக்கத்தை தகர்ப்பதற்கான பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் எதிர்க்கட்சிகளின் திட்டம் வெற்றி பெற்றிருக்கும்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிகிறது. எனவே, புதிய ஜனாதிபதி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளார். மாநிலங்களவையை சேர்ந்த 223 எம்பி.க்கள், மக்களவையின் 543 எம்பி.க்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேர் வாக்களித்து, ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். இவர்களின் மொத்த வாக்கு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. போட்டி இருக்கும் பட்சத்தில், மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை பெறுபவரே புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார். உபி தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றிருந்தால், எதிர்க்கட்சிகளின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பொதுவேட்பாளராக நிறுத்தும் திட்டம் நனவாகி இருக்கும். இப்போது, அதற்கு வாய்ப்பு குறைந்து விட்டது. இந்த 4 மாநில தேர்தல் வெற்றி, பாஜ.வுக்கு மிகப்பெரிய சாதகமாகி இருக்கிறது.