உபி தேர்தலில் பாஜ.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தனர். ஆனால் சமாஜ்வாடி கட்சிக்கு அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மட்டுமே பிரசாரத்தில் முக்கியமாக வலம் வந்தார். மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி ஓரிரு நாள் அகிலேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரை தவிர வேறு பெரிய தலைவர்கள் யாரும் களத்துக்கு வரவில்லை.தேர்தலுக்கு முன்பே விஜய் ரத யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சென்று அகிலேஷ் ஆதரவு திரட்டினார். அவரது பேச்சை கேட்க ஏராளமானோர் திரண்டனர். ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, பாரதிய சுகல்தேவ் சமாஜ் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அவர்களுடைய செல்வாக்கு மிகுந்த இடங்களிலேயே அதிக கவனம் செலுத்தினர். எனினும், தனி ஆளாக நின்று அகிலேஷ் 130 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு?: உபி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களை வென்று பாஜ ஆட்சி அமைக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டால் பாஜ அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது என காங்கிரஸ் கூறி உள்ளது. இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் சர்மா கூறுகையில், ‘ மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்,’’ என்றார்.