பாங்காக்,
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்பட்டது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் அவரது உடல், இன்று அதிகாலை பாங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்றடைந்ததும், வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.
அதைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க விக்டோரியா மாகாண அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விடுமுறையை கழிக்க தாய்லாந்து சென்றிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பின் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், வார்னேவின் இறுதிச்சடங்கில், தங்களது கிரிக்கெட் ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.