தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குதல் போன்ற மீதி இருக்கும் வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்றும் தற்போது குடும்ப தலைவி பெயரில், வீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும், இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பாலியல் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.