தமிழ்த் திரைப்படத்தின் 23 சங்கத்தினரின் ஊதிய உயர்வு மற்றும் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று கையெழுத்தானது. தயாரிப்பாளர் முரளி ராமசாமி, டி.சிவா, தனஞ்செயன், ராதாரவி, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சுரேஷ்காமாட்சி உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நிர்வாகிகள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது…
“தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த பொதுவிதிமுறைகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெறும். இந்நிலையில் ஏழு ஆண்டுகள் கழித்து அதாவது 2017க்கு பிறகு 2022-25ம் ஆண்டுக்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான திரைப்படத் தயாரிப்பு வழிகாட்டுதல் புரிந்துணர்வு பொதுவிதிமுறைகள் ஒப்பந்தத்தில் சங்க நிர்வாகிகள், பெப்சியின் நிர்வாகிகள் மற்றும் 23 சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டார்கள். இந்த ஊதிய உயர்வு மற்றும் பொது விதிமுறைகள் அனைத்தும் 10.3.2022 முதல் 10.3.2025 வரை அமலில் இருக்கும்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் மேற்படி புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சம்பளத் தொகையினை மட்டுமே படப்பிடிப்பின் போது அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். புதிய ஊதிய உயர்வு குறித்த விவரங்களை சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி தயாரிப்பாளர் பெப்சியின் தலைவரான ஆர்.கே.செல்வமணியிடம் பேசினேன்.
“ஊதிய உயர்வு குறித்து கடந்த மூன்று முறை ஏறக்குறைய 16 வருடங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் சுமுகமாகக் கையெழுத்திட்ட பேச்சு வார்த்தை இதுதான். தயாரிப்பாளர்கள் மனமுவந்து ஊதிய உயர்வளிச்சிருக்காங்க. இப்ப மினிமம் 38 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வந்திருக்கு. சினிமா நல்லா இருக்கணும்னு நாங்களும் சில பொது விதிமுறைகளை மாத்தி அமைச்சிருக்கோம். உதாரணமா, முன்னாடியெல்லாம் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஒரு கால்ஷீட்னா… எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரமாச்சுனா, அது டபுள் கால்ஷீட் கணக்காகிடும். இப்ப அதை ரெண்டா பிரிச்சிருக்கோம். அதனால முழுச் சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. அரைச் சம்பளம் கொடுத்தா போதுமானது.
பயணத்திலும் தூரத்தைக் கணக்கிடாமல், பயணிக்கும் நேரத்தைக் கணக்கு வச்சுக்க முடியும். அதைப் போல ஆறு கோடிக்குள் எடுக்கப்படும் படங்கள் சிறுபடங்கள். சிறு படங்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுத்திருக்கோம். நம்ம திரைப்பட உலகில் ஆரோக்கியமான சூழல் நிலவ விதிகளை மாத்தி அமைச்சிருக்கோம். இதனால தயாரிப்பாளர்களுக்கு 25 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை தயாரிப்புச் செலவு குறையும். இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று முதல் மூன்றாண்டுகளுக்கு அமலில் இருக்கும்” என்கிறார் ஆர்.கே.செல்வமணி.