வேலூர் அருகேயுள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக சத்துவாச்சாரியிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தைப் பிறந்தது. ஆனால், பிரசவித்த சில மணி நேரங்களிலேயே தாய் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால், தாய்ப்பாலும், தாய்ப்பாசமும் அந்தப் பச்சிளம் குழந்தைக்குக் கிடைக்கவில்லை. தாய் முகத்தை பார்க்காமல், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்கிறது.
அந்த விவசாயி, தனது கால்நடைகளை வேலூரிலிருக்கும் அரசு பன்முக கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அடிக்கடி அழைத்து வருவது வழக்கம்.
அப்போது, தன் மனைவி இறந்துவிட்டதையும், குழந்தை தாய்ப்பாலின்றி வளர்வதையும் கால்நடை மருத்துவர் ரவிசங்கரிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார் விவசாயி. இது குறித்து மருத்துவர், தன் மனைவி சந்தியாவிடம் கூறியிருக்கிறார். இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.
இந்நிலையில், மருத்துவர் ரவிசங்கரும், சந்தியாவும் தாயை இழந்த அந்தக் குழந்தையை நேரில் சென்று பார்த்துள்ளனர். தாய்ப்பால் கிடைக்காததால், குழந்தையின் உடல் எடை மிகவும் குறைவாக இருந்தது. கவலையுற்ற மருத்துவரின் மனைவி சந்தியா, தாயை இழந்த குழந்தைக்குத் தான் தாய்ப்பால் புகட்ட விரும்புவதாகத் தன் கணவரிடம் தெரிவித்தார்.
கணவரும் அதை வரவேற்று ஊக்குவிக்க, கடந்த மூன்று மாதங்களாக வாரம் ஒருமுறை, தங்களது வீடு அமைந்திருக்கும் காட்பாடியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கீழ் அரசம்பட்டு கிராமத்துக்குப் பயணம் செய்து, அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டி வருகிறார் சந்தியா.
இது குறித்து சந்தியாவின் கணவர், மருத்துவர் ரவிசங்கர் கூறுகையில், “பிறந்த குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கத் தாய்ப்பால் அவசியம். தாய்ப்பால் கிடைக்காமல் வளரும் குழந்தைகளுக்கு உதவும் தாய்ப்பால் தானம், ஆகச் சிறந்த தானம்.
பாலூட்டும் தாய்மார்கள் தாய்பால் தானம் செய்ய முன்வரவேண்டும். 25 கிலோ மீட்டர் தொலைவில் அந்தக் குழந்தை இருப்பதால், தினமும் சென்று பால் புகட்ட முடியவில்லை. என்றாலும், எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், வாரம் ஒருநாள் குழந்தையின் வீட்டுக்கே சென்று பால் புகட்டுகிறார் என் மனைவி. பிறந்த உடனேயே தாயை இழந்த அந்தக் குழந்தைக்கு கடந்த 3 மாதங்களாக தாய்ப்பாலுடன் தாய்ப்பாசத்தையும் புகட்டுகிறார்.
மேலும், தாயை இழந்த குழந்தைகளின் நலன் காக்க தாய்ப்பால் சேமிப்பு வங்கியைத் தொடங்கவிருக்கிறேன். இப்போதே பத்துக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் தாய்ப்பால் தானம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். விரைவில், பல குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்க வழிவகை செய்வோம்’’ என்றார் தாய்மைக்கு நிகரான உணர்வோடு!