திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் ஆறுகண் பாலம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் விஷேஷம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 7-ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 8-ம் தேதி இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று சுத்த பூஜை நடைபெற்றது. அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளித்து வீதிகளில் வலம் வந்தார். அப்போது பொதுமக்கள் மாவிளக்கு, தேங்காய், பழம், பூக்கள் வைத்து அம்மனை வழிபட்டனர்.
குழுமாயி அம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘குட்டி குடித்தல்’ இன்று நடைபெற்றது. ஆட்டின் ரத்தத்தை அம்மனின் அருள்பெற்ற, சாமி ஆடுபவரான மருளாளி, குடிக்கும் நிகழ்ச்சி தான் அது. இதையொட்டி புத்தூர் மந்தையில் குழுமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்குத் தேங்காய் பழம் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். அதையடுத்து பக்தர்களின் தோள் மீது அமர்ந்தபடி மருளாளி மேள தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இத்திருவிழாவில் அரசு சார்பில் ஆட்டுக் குட்டிகள் கொடுப்பது வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு சார்பில் முதல் ஆடு பலி கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்த ஆட்டுக் குட்டிகள் கத்தியால் வெட்டப்பட்டு மருளாளியிடம் தூக்கிக் கொடுக்கப்பட்டது. மருளாளி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து அருள்வாக்குக் கூற, பக்தர்கள் பரவசமடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்தத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவின் தொடர்ச்சியாக நாளை மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் சாமி குடிபுகுதலும் நடைபெறுகிறது.