திருப்பதி:
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து சென்று வருகின்றனர்.
திருப்பதியில் நாளொன்றுக்கு 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன.
இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து கட்டண டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலையில் தேவஸ்தானம் ஐஆர்சிடிசி மூலம் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும். அங்கு பகல் 11 மணிக்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். ரூ.300 கட்டண தரிசனத்தில் அவர்கள் தரிசனத்திற்கு செல்லலாம்
அவர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐஆர்சிடிசி நிறுவன உதவியாளர் வாங்கி கொடுப்பார். திருச்சானூர் கோவிலிலும் அவர்களுக்கு தரிசன ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.