இந்த தேர்தலில் பாஜகவைத் தவிர ஆம் ஆத்மி கட்சி மட்டுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அக்கட்சி பஞ்சாபில் 91 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மேலும், கோவாவில் 2 இடங்களுடன் தனது கணக்கைத் தொடங்கி 6% வாக்குகள் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார். ஆம் ஆத்மி கட்சி வேறொரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான கட்டத்தில் உள்ளது. இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே பிராந்தியக் கட்சியாக ஆம் ஆத்மி உருவாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தடம், லட்சியம், வளர்ந்து வரும் போக்கு ஆகியவற்றைக்கொண்டு ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை உரிமை கோர முடியுமா என்ற கேள்விகள் இப்போது எழுப்பப்படுகின்றன?
அதற்கான பதில்: இதுவரை இல்லை. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றினால், மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி வரும் ஆண்டுகளில் தேசியக் கட்சியாக முன்னேறும்.
ஒரு கட்சி எப்படி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
ஒரு கட்சி ‘தேசியக் கட்சியாக’ அங்கீகரிக்கப்படுவதற்கு மூன்று அளவுகோல்களில் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும் – அவற்றில் ஆம் ஆத்மி இதில் எதையும் பூர்த்தி செய்யவில்லை:
- குறைந்த பட்சம் மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மக்களவையில் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 11 இடங்கள் அல்லது 2 சதவீதத்தையாவது வெல்ல வேண்டும். தற்போது, ஆம் ஆத்மிக்கு மக்களவையில் 1 இடம் மட்டுமே உள்ளது; அது பகவந்த் மானின் இடம்.
- நான்கு மக்களவைத் தொகுதிகளையும் சேர்த்து நான்கு மாநிலங்களில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி, ஆம் ஆத்மி கோவாவில் 6.7% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. மேலும், உத்தரகாண்டில் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளது. 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 53.6% வாக்குகளைப் பெற்றது.
- நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ‘மாநிலக் கட்சி’யாக அங்கீகரிக்கப்பட வேண்டும். கோவா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அக்கட்சிக்கு அங்கீகாரம் உள்ளது. எந்த ஒரு கட்சியும் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அது சட்டமன்றத் தேர்தலின் போது 6 சதவீத வாக்குகளையும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்; அல்லது மாநிலத்திலிருந்து மக்களவையில் 6 சதவீத வாக்குகள் மற்றும் மாநிலத்திலிருந்து 1 எம்.பி. அல்லது மொத்த சட்டமன்ற இடங்களில் 3 சதவீதம் அல்லது 3 இடங்கள் (இதில் எது அதிகமோ அது) பெற்றிருக்க வேண்டும்; அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் இருந்து அல்லது சட்டமன்றத் தேர்தல்களின் போது ஒவ்வொரு 25 மக்களவைத் தொகுதிகளிலிருந்தும் ஒரு எம்.பி. அல்லது மாநிலத்தின் மொத்த வாக்குகளில் 8 சதவீத வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள் எவை?
தற்போது, பாரதீய ஜனதா கட்சி (பாஜக), இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி என மொத்தம் 7 கட்சிகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன.
2016-ல் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்துக்கு தேர்தல் ஆணையத்தால் தரம் உயர்த்தப்பட்டது. இப்போது மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உள்ளது.
தேசிய கட்சியாக இருப்பதன் பலன்கள் என்ன?
ஒரு தேசிய அல்லது மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுவது, அந்த கட்சியின் தேர்தல் சின்னத்தை இந்தியா முழுவதும் உள்ள தேர்தல்களில் வேறு எந்த அரசியல் அமைப்பும் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது. மற்ற பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையம் அவ்வப்போது அறிவிக்கும் இலவச சின்னங்களின் தொகுப்பிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக, பாஜகவின் தாமரைச் சின்னம் அல்லது காங்கிரஸின் கைச் சின்னம் மற்ற கட்சிகளுக்கு வரம்பிற்கு அப்பாற்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் தங்கள் கட்சி அலுவலகங்களை அமைக்க அரசிடம் இருந்து நிலம்/கட்டிடங்களைப் பெறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சிகளில் 40 நட்சத்திர பிரச்சாரப் பேச்சாளர்கள் வரை இருக்கலாம்; மற்றவர்கள் 20 ‘நட்சத்திர பிரச்சாரப் பேச்சாளர்களை மட்டுமே வைத்திருக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“