இந்தியாவில் கடந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்போது வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த தடை உத்தரவு சமீபத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவிக்கும்போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தேர்தல் ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் குழு கூறியதாவது:-
தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் கொரோனாவின் தற்போதைய நிலையை மனதில் கொண்டு, வாக்கு எண்ணும்போதும் மற்றும் அதற்குப் பிறகும் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்த வழிகாட்டுதல்களை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வெற்றி கொண்டாட்டத்திற்கான தடையை திரும்பப் பெறப்படுகிறது.
கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதால் தேர்தல் காலத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் தொடர்பான விதிமுறைகளை ஆணையம் படிப்படியாக தளர்த்தியது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
பிரியங்கா பிரசாரம் கைகொடுக்கவில்லை- காங்கிரசுக்கு கடும் பின்னடைவு