லக்னோ : தேசிய அளவில் பரபரப்புக்கு உள்ளான லக்கிம்பூர் கெரி, ஹத்ராஸ் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தர பிரதேசம் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவைப்படுகிறது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 61.04% வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் பாஜக 263 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 30 ஆண்டில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய முதல் கட்சி என்ற பெருமையை பாஜ பெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2வது முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆகிறார். இந்த நிலையில் தேசிய பரபரப்புக்கு உள்ளான லக்கிம்பூர் கேரி, உன்னாவ், ஹத்ராஸ் ஆகிய இடங்களிலும் பாஜக முன்னிலையில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூர் கேரி, உன்னாவ், ஹத்ராஸ் ஆகிய மூன்று இடங்களிலும் பாஜக தோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. உன்னாவ், ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை நாட்டை உலுக்கியது மட்டுமல்லாமல் உலகளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த 2020ம் ஆண்டு ஹத்ராஸ் என்ற பகுதியில் 19 வயது பட்டியலின பெண்ணை, நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள் கடுமையாகத் தாக்கியதில்நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் 14 நாட்களாக உயிருக்குப் போராடி உயிரிழந்தார்.இதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வந்த நேரத்தில், லக்கிம்பூர் கேரியில் அமைதிவழியில் நடைபெற்ற விவசாயிகள் மீது கார் மோதி படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டது.இவ்விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால் லக்கிம்பூர் கேரியில் பாஜக தோல்வியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.உன்னாவில் 2017ம் ஆண்டு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு காவல் நிலையம் சென்ற அவரது தந்தை காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குல்தீப் செங்காரை குற்றவாளி என தீர்ப்பளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.