இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.
டெல்லியில் அரசு அதிகாரியாக உயர் பதவியில் இருந்த கெஜ்ரிவால், ஊழல் எதிர்ப்பு போராளியான அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகவே முதலில் களம் கண்டார். பின்னர் ‘ஆம் ஆத்மி கட்சி’யை தொடங்கி தலைநகர் டெல்லியில் அதிரடியாக காங்கிரசை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தார்.
இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலின் பார்வை பஞ்சாப் மாநிலத்தின் பக்கம் திரும்பியது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்த போதிலும், ஆம் ஆத்மி கட்சி யாரும் எதிர்பாராத வகையில் 20 இடங்களில் வெற்றி பெற்றது.
அப்போதில் இருந்தே ஆம் ஆத்மி மீது பஞ்சாப்பில் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அங்கு அமோக வெற்றியை பெற்றுள்ளது.
டெல்லியில் எப்படி காங்கிரசை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததோ அதே போன்று பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று காங்கிரசை வீழ்த்திக் காட்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தங்களின் தவறான முடிவுகளால் தங்களது செல்வாக்கை இழந்துள்ளது.
கட்சியில் உள்ள குறிப்பிட்ட நபர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு மாநில அளவில் செல்வாக்குடன் திகழும் நபர்களை தூக்கி எறிவது காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல.
அப்படி காங்கிரஸ் தலைமை மேற்கொண்ட தவறான முடிவுகள் காரணமாகவே தேர்தலில் தொடர் தோல்விகளை அந்த கட்சி சந்தித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் அதுதான் நிகழ்ந்தது.
பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் அந்த கட்சியின் முன்னணி தலைவராகவும், முதல்- மந்திரியாகவும் இருந்த கேப்டன் அம்ரீந்தர்சிங்கை காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் ஓரம் கட்டினார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக அங்கு சிறப்பாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் முதல்- மந்திரியான அம்ரீந்தர்சிங் – சித்துவுக்கு இடையே ஏற்பட்ட மோதல், காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. காங்கிரசில் இருந்து விலகி அம்ரீந்தர்சிங் தனிக்கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் அம்ரீந்தர்சிங் கூட்டணி அமைத்தார். பஞ்சாப்பை பொறுத்தவரையில் பா.ஜனதாவுக்கு வலுவான அடித்தளம் கிடையாது. இருப்பினும் தனது சொந்த செல்வாக்குடன் வெற்றி பெற்றுவிடலாம் என அம்ரீந்தர்சிங் நினைத்து இருந்தார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தங்களது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டது. அம்ரீந்தர்சிங் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ராகுலும், பிரியங்காவும் பஞ்சாப்பில் முதல்-மந்திரி வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை நிறுத்தினர்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அவரை அந்த கட்சி முன்னிறுத்தியது. சீக்கியர் அல்லாத ஒருநபரை முதல்- மந்திரி வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியதை அம்மாநில சீக்கியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி அம்ரீந்தர்சிங் விவகாரம் மற்றும் முதல்- மந்திரி வேட்பாளர் தேர்வு போன்ற காங்கிரஸ் கட்சியின் தவறுகளால் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ‘இமாலய சக்தி’யாக மாறி இருக்கிறது.
பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான அளவு இடங்களை ஆம் ஆத்மி கட்சி பிடிக்கும் என்றே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும், பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தெரிவித்து இருந்தன.
ஆனால் இந்த கணிப்புகளை மிஞ்சும் வகையில் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாக பறக்கவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான ‘துடைப்பம்’ டெல்லியில் மிகவும் பிரபலமான சின்னமாகும். அந்த சின்னத்திலேயே பஞ்சாப்பிலும் களம் இறங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.
அவரது இந்த அசத்தலான வெற்றி மற்ற மாநிலங்களிலும் பேசப்படும் வெற்றியாக மாறி இருக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக மற்ற மாநிலங்களிலும் வரும் காலங்களில் ஆம் ஆத்மி கட்சி காலூன்ற திட்டமிட்டு இனி காய்களை நகர்த்தும் என்பதில் ஐயமில்லை.