சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. 117 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் ஏறத்தாழ 90 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 70 ஆண்டுகாலமாக அகாலிதளம், காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் கோலூன்றி வந்த மாநிலத்தில், இரண்டு கட்சிகளையும் புறந்தள்ளி ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளரிடம் அனுபவம் மிக்க முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்திருக்கிறார். பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தோல்வியடைந்தார். பாதார் தொகுதியில் 30,519 வாக்குகள் வித்தியாசத்தில் சரண்ஜித் சிங் சன்னி தோல்வியை தழுவினார். பாதார் தொகுதியில் ஆம் ஆத்மியை சேர்ந்த லப்சிங் குகோக் 52,357 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல், சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட சாம்கவுர் சாகேப் தொகுதியிலும் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சாம்கவுர் சாகேப் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் 54,772 வாக்கும், சரண்ஜித் சிங் சன்னி 50,050 வாக்கும் பெற்றனர்.