பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
கேப்டன் அமரீந்தர் சிங் புண்ணியத்தில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியை பஞ்சாபில் அறுவடை செய்து விட்டது அமரீந்தர் சிங்
காங்கிரஸ்
சார்பில் முதல்வராக இருந்த கால கட்டத்தில் மக்களின் மிகப் பெரிய அதிருப்தியை சம்பாதித்து விட்டார். இதுதான் காங்கிரஸுக்கு எதிராக இன்று மொத்தமாக மாறி ஆப்பு வைத்து விட்டது.. “ஆப்” (ஆம் ஆத்மி) மூலம்.
ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வரலாறும் படைத்து விட்டது. மறுபக்கம் காங்கிரஸ் கட்சி ஆட்சியையும் பறி கொடுத்து, பல சோதனைகளையும் சந்தித்துள்ளது.
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆட்சியின் கடைசிக் காலத்தில்தான் முதல்வர் பதவிக்கு வந்தார். தன்னை எளிமையான முதல்வராக நிலை நிறுத்திக் கொண்டார் என்றாலும் கூட அமரீ்நதர் சிங் காலத்தில் ஏற்பட்ட அதிருப்தி அலை விஸ்வரூபம் எடுத்து நின்றதால் சன்னியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. இடையில் சித்துவுடன் உட்கட்சி மோதல் வேறு.
இந்த நிலையில் இத்தேர்தலில் சன்னி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். சம்கூர் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட அவரை ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோற்கடித்துள்ளனர்.
பஞ்சாப் தேர்தலில் பலமுனை போட்டி நிலவியது. காங்கிரஸ் ஒருபக்கம், பாஜக மறுபக்கம். ஆம் ஆத்மி இன்னொரு பக்கம். இது தவிர அகாலிதளம் பகுஜன் சமாஜ் கூட்டணி வேறு. காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சன்னி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். ஆனாலும் ஒன்றில் கூட அவரால் வெல்ல முடியவில்லை.
சன்னி தோற்றுப் போன 2 தொகுதிகளில் ஒன்றான சம்கூர் சாஹிப் தொகுதியில்தான் கடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றிரு்நதார். ஆனால் தற்போது அத்தொகுதியை ஆம் ஆத்மியிடம் பறி கொடுத்துள்ளார் சன்னி. அமரீ்நதர் சிங்கை மாற்றுவதில் காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்தே சொதப்பிக் கொண்டிருந்தது. கடைசி நேரத்தில்தான் அவரை மாற்றும் நிலைக்கு காங்கிரஸ் போனது.
நேரடியாக அவரை மாற்றத் தயங்கிய காங்கிரஸ், நவ்ஜோத் சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக்கியது. இதனால் வெகுண்டெழுந்த அமரீந்தர் சிங், கட்சியை விட்டு விலகினார். தனிக்கட்சி தொடங்கினார். தனிக் கட்சி தொடங்கியதும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இதன் விளைவு இப்போது காங்கிரஸ் ஆட்சியும் பறி போய் விட்டது. காங்கிரஸின் பலமும் தளர்ந்து போய் விட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவாலும் கூட பெரிதாக சாதிக்க முடியவில்லை. அமரீந்தர் சிங்கின் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட போதிலும் கூட அவரால் பாஜகவுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மாறாக காங்கிரஸுக்குத்தான் பெருத்த நஷ்டமாகியுள்ளது.