அமெரிக்காவின் மேரிலேண்டைச் சேர்ந்த இதய நோயாளியான முதியவர் டேவிட் பென்னட்டுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது மருத்துவ அறிவியலின் சாதனையாகக் கருதப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து இரு மாதங்களுக்குப் பின் அவர் நேற்று உயிரிழந்துள்ளது ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் மாகாணத்தின் மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த 57 வயது முதியவர் டேவிட் பென்னட். இதய நோயாளியான பென்னட், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிருக்குப் போராடிய நிலையில், மேரிலேண்ட் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்குத் தகுதியற்றவராக இருந்துள்ளார். இதனால், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மருத்துவக் குழு முடிவெடுத்தது. இதற்கு, அமெரிக்காவின் மருந்து நிர்வாக துறையும் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து, அவருக்குப் பன்றியின் இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை மூலம் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து இரு மாதங்களுக்குப் பிறகு, அவர் உயிரிழந்துள்ளார்.
பென்னட்டின் மறைவை அடுத்து, மேரிலேண்ட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `கடந்த சில நாள்களாக பென்னட்டின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பல கட்ட சிகிச்சைகளுக்குப் பின், அவர் உயிர் பிழைக்க மாட்டார் எனத் தெரிய வந்த பின், நோய்த்தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் பலனாக, தனது இறுதிக் கட்டத்தில் அவர் தன் குடும்பத்தாருடன் சில உரையாடல்களில் ஈடுபட இயன்றது’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மாற்றப்பட்ட இதயம் நிராகரிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சில வாரங்களுக்கு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் இதய மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் இயக்குநர் முஹம்மது மொஹிடின் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நோயெதிர்ப்பு மண்டலம் போதுமான அளவு செயல்திறனை கொண்டிருக்கும்போது, மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம் மனித உடலுக்குள் நன்றாகச் செயல்படும் என்பதை நாங்கள் நன்றாகப் பரிசோதித்த பின்னரே சிகிச்சையை மேற்கொண்டோம்.
மேலும், இந்த சிகிச்சையை தொடர்வதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எதிர்கால மருத்துவப் பரிசோதனைகளில் எங்கள் பணியை சிறப்பாகத் தொடரவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
நவீன அறிவியல் ஆராய்ச்சிகளின் நீண்ட காலப் போராட்டமான மாற்று இனங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்தும் முயற்சி கடந்த இரு மாதங்களுக்கு முன் வெற்றியடைந்ததாக கருதப்பட்ட நிலையில், பென்னட்டின் மறைவின் மூலம் சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.