பிரதமர் மோடி
தலைமையிலான
பாஜக
ஆட்சியில் ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற நிலைப்பாடு பல்வேறு விஷயங்களில் முன்னெடுப்பதை பார்க்க முடிகிறது. ரேஷன் கார்டு, பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றில் தொடங்கி தேர்தல் வரை விஷயம் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான மசோதா பாஜகவின் பெரும்பான்மையால் மக்களவையில் எளிதில் நிறைவேற்றப்பட்டு விடும். ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும்.
இதனை அவசர சட்டமாக நிறைவேற்றினால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே இரு அவைகளிலும் போதிய ஆதரவுடன் சட்டமாக கொண்டு வர பாஜக காத்திருக்கிறது. இதற்கு ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் களநிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது. உத்தரப் பிரதேசம் 31, உத்தரகாண்ட் 3, பஞ்சாப் 7, கோவா 1, மணிப்பூர் 1 என மாநிலங்களவை சீட்கள் இருக்கின்றன.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 சீட்களில் தற்போது பாஜக வசம் 97 உள்ளது. ஆனால் எந்தவொரு மசோதாவும் நிறைவேற 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே கூட்டணி மற்றும் பிராந்திய கட்சிகளிடம் இருந்து எஞ்சிய 26 பேரின் ஆதரவை எதிர்நோக்கி பாஜக காத்திருக்கும். ஒட்டுமொத்தமாக 2017ல் கிடைத்த வெற்றியை ஒப்பிடுகையில், 2022ல் பாஜகவிற்கு சற்று பின்னடைவாகவே இருக்கிறது.
இது மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டாயம் பாதிக்கும். இதனால் புதிதாக எந்தவொரு மசோதாவை நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்படும். அப்படியிருக்கையில்,
ஒரே நாடு ஒரே தேர்தல்
என்ற கோஷம் முன்பை விட சற்று அதிகமாகவே முன்னெடுக்கப்படுவதை காணலாம். இன்று காலை கூட தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை.
இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அரசியமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதுகுறித்து நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தயாராக உள்ளது என்றார். இதன் தொடர்ச்சியாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடத்தப்படுமா?
இல்லை 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படுமா என தெரியவில்லை. ஒருநாள் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார். கடந்த மாதம் கரூரில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும் என்றார்.
இவ்வாறு ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இது
திமுக
அரசிற்கு நெருக்கடியான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2021ல் தான்
மு.க.ஸ்டாலின்
தலைமையில் ஆட்சி அமைந்தது. மத்திய அரசின் இந்த திட்டம் நிறைவேறினால் 3 ஆண்டுகளில் தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் வரும். இருப்பினும் இந்த சட்டத்திற்கு தேசிய அளவில் உள்ள கட்சிகள் எப்படி வினையாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்தே அரசியல் களம் அமையும்.