உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவில் பாஜக பஞ்சாபை தவிர 4 மாநிலங்களையும் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. பாஜகவின் வெற்றியை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான நலத் திட்டங்களில் மக்கள் நம்பிக்கை வைத்ததன் எதிரொலியால் உத்தர பிரதேசத்தில் பாஜக மகத்தான வெற்றிப் பெற்றுள்ளத என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளதாவது:-
உ.பியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தின் மீது மக்கள் முத்திரை பதித்துள்ளனர். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மக்களுக்கு நன்றி. பிரதமர் நரேந்திர மோடியின் கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான நலத் திட்டங்களில் மக்கள் நம்பிக்கை வைத்ததன் எதிரொலியால் உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
இதற்காக, கட்சித் தொண்டர்களுக்கும், மாநில பாஜக தலைமைக்கும் எனது வாழ்த்துகள். உ.பி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பாஜக உறுதியாக உள்ளது. பாஜகவுக்கு மீண்டும் பணியாற்ற வாய்ப்பளித்த உத்தரகாண்ட் மக்களுக்கு நன்றி.
மணிப்பூர் மக்களுக்கு நன்றி. வளமான வடக்கு- கிழக்கு பகுதி மக்கள் தங்களது இதயங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனி இடத்தை கொடுத்துள்ளனர். இந்த வெற்றி அதற்குச் சான்றாகும்.
பாஜக மீது நம்பிக்கை வைத்ததற்காக கோவா மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கோவாவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் எந்த தடைகளும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சாதி, மத அரசியலை மக்கள் குழிதோண்டி புதைத்துவிட்டனர்- யோகி ஆதித்யநாத் வெற்றி உரை