உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது.
நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்ளன. இங்கு பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பா.ஜனதாவுக்கு அடுத்த படியாக அகிலேஷ் யாதவ் கட்சி அதிக இடங்களை பிடித்து இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை மட்டுமே பிடிக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட மிகவும் பரிதாபமான தோல்வியை சந்தித்து உள்ளது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் அந்த கட்சி 20 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை தூக்கி எறிந்துவிட்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களை போன்று பஞ்சாபிலும் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்த காங்கிரசுக்கு தேர்தல் முடிவுகள் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 19 இடங்களிலும், மணிப்பூரில் 60 இடங்களில் 6 இடங்களிலும், கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 12 இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
5 மாநிலங்களிலும் சேர்த்து 690 தொகுதிகள் உள்ளன. இவற்றில் வெறும் 58 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 10 சதவீத வெற்றியை மட்டுமே அந்த கட்சியால் பெற முடிந்தது.
5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களான ராகுல், பிரியங்கா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்தனர். குறிப்பாக பிரியங்கா உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தனது பிரசாரத்தை வேகப்படுத்தி இருந்தார். பெண்களை கவரும் வகையில் மாத ஓய்வூதியம், இலவச இருசக்கர வாகனம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த அறிவிப்புகள் எதுவும் ஓட்டாக மாறவில்லை. ஓட்டு பெட்டிகளை இன்று காலையில் திறந்து பார்த்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்து உள்ளது.