புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது என்று தெரிவிக்கபட்டுள்ளது. மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ச. மயில் தலைமையிலும், அகில இந்திய துணைத் தலைவர் கே. ராஜேந்திரன் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு தமிழக அரசும், தனது ஊழியர்களுக்கு சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிபிஎஸ் திட்டம் இரத்து, தேசிய கல்வி கொள்கை 2020 ரத்து, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்தல், உள்ளிட்ட ஊழியர் நலன், மக்கள் நலன், தேச நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மத்திய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர் அமைப்புகள், மார்ச் 28ஆம் தேதியும், 29 ஆம் தேதியும் நடத்துவதாக அறிவித்து உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில், தமிழ்நாட்டில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் 9 இணைப்பு சங்கங்களும் பங்கேற்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.