புனேவில் 50 வயதான அரசு ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 5 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புனே மாநிலத்தின் போசாரி காவல் ஆய்வாளர் ஜிதேத்ரா பாட்டீஸ் கூறியதாவது, “மார்ச் 5-ம் தேதி புனே போசாரியில் பணிபுரியும் 50 வயதான அரசு ஊழியர் ஒருவருக்கு செல்போனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து அழைப்பதாக கூறி பேசி இருக்கிறார்.
உங்களின் வங்கிக் கணக்கு பான் எண்ணுடன் இணைக்கவில்லை. எனவே உங்களின் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதை எனக்குத் தெரிவியுங்கள், உங்கள் எண்ணை வங்கியுடன் இணைக்கிறேன். அப்படி இணைக்காவிட்டால் உங்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும் எனவும் பயமுறுத்தியுள்ளார்.

அவரின் பேச்சை நம்பிய அந்த முதியவர், அது உண்மையான வங்கி ஊழியர் என வந்த விவரங்களைக் கூறியுள்ளார். அதன் பின்பு சூழலை புரிந்துகொண்டு உடனே வங்கிக்குச் சென்று தனது கணக்கை முடக்கக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதற்கு முன்பே அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4,95,801 பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த அரசு ஊழியர் நேற்று போசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புனே போசாரி காவல்நிலையத்தில் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவுகள் 66(c) மற்றும் 66(d) ஆகியவற்றின் கீழ் போசாரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.