நியூயார்க்: அமெரிக்காவில் செயல்படும் டிஜிட்டல் தரகு நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளமில்லாத கட்டாய விடுமுறை (லே ஆப்) அளித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயல்படும் இந்நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தி யாவைச் சேர்ந்த விஷால் கார்க் உள்ளார். இந்நிறுவனம் டிஜிட்டல் அடகு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கட்டாய விடுப்பு அளிக்கும் நடவடிக்கையை மார்ச் 8-ம் தேதி முதல் மேற்கொள்ள இந்நிறுவனம் திட்ட மிட்டிருந்தது.
ஆனால் தற்போது மார்ச் 9-ல் இருந்து செயல்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விதம் கட்டாய விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை பணி புரிந்ததற்கான ஊதியம் வழங்கப் பட்டுள்ளது.
இதனால் இதற்கு மேல் தாங்கள் அந்நிறுவனத்தில் பணியில் நீடிக்க முடியாது என்றே பலரும் கருதுகின்றனர்.
3,000 பணியாளர்கள்…
இவ்விதம் காசோலை பெறப் பட்ட ஊழியர்களுக்கு எவ்வித தகவலும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 8 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். கட்டாய விடுப்பில் செல்லுமாறு 3,000 பணியாளர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கெவின் ரையான் இது தொடர்பாக அனுப்பியுள்ள மின்னஞ்சலில், மாறிவரும் வட்டி விகிதம் மற்றும் மறு அடமான சூழலில் ஏற்பட்டுள்ள நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு 60 நாள் முதல் 80 நாட்களுக்கான ஊதியம் காசோலையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இனிமேலும் அந்நிறுவனத்தில் பணியில் தொடரமுடியாது என்றே தோன்றுகிறது.