உக்ரைனில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று ரஷ்ய வான் தாக்குதலில் சிக்க, 17 பெண்கள் காயங்களுடன் தப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட குறித்த வான் தாக்குதலில் தரைமட்டமான மருத்துவமனையின் இடிபாடுகளில் சிக்கி பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இருதரப்பும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையிலேயே, ரஷ்யா அத்துமீறி இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட ஜெலென்ஸ்கி, இதுவரை 17 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்த அதே போர் நடவடிக்கைகளை உக்ரைனிலும் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை உக்ரைனில் 40கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ரஷ்ய துருப்புகள் வான்தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது Mariupol நகரில் மகப்பேறு மருத்துவமனை மீது முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதலில், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் என இடிபாடுக்குள் சிக்குண்டு புதைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தனது பேஸ்புக் பக்கத்தில் காட்டமாக விமர்சித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இன்னும் எவ்வளவு காலம் உலகம் பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் உடந்தையாக இருக்கும்? இப்போதே வான்வெளியை மூட உத்தரவிடுங்கள்!
ரஷ்யாவில் கொலைகளை நிறுத்த உதவுங்கள்! உங்களிடம் அதிகாரம் உள்ளது, ஆனால் நீங்கள் மனித நேயத்தை இழப்பது போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடந்த பல நாட்களாக தங்கள் நாட்டு வான்வெளியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்.
ஆனால், அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் அவரது கோரிக்கையை நிராகரித்து வருவதுடன், அப்படியான ஒரு முடிவு ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்குமான மோதலாக மாறக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.