சென்னை: கடந்த 32 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியிருப்பதன் மூலம் உச்ச நீதிமன்றம் தனது கடமையைச் செய்துள்ளது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சட்டவல்லுநர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறியதாவது:
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றநீதிபதி கே.சந்துரு: 32 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார். மாநில அரசும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை பலமுறை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கூட தமிழக ஆளுநரும், மத்திய அரசும் இதில் காலம்தாழ்த்தி அரசியல் செய்து வரு கின்றனர்.
ஒருவிதத்தில் அரசும், அதிகாரிகளும் செய்ய முடிந்தும், செய்ய முடியாத ஒரு விஷயம் மீது, இறுதியில் நீதிமன்றத்தால்தான் நிவாரணம் கொடுக்க முடியும் என்ற நிலைமை கேவலமான ஒன்று. அதிகாரமிருந்தும் செய்ய மனமில்லாதவர்களுக்கு நீதிமன்றம் வாயிலாக செய்யும்போது சவுகரியமாகி விடுகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போதும், பாஜக ஆட்சியின்போதும் மத்திய அரசின்பார்வை மாறவே இல்லை.
குற்றத்தை குற்றமாகப் பார்க்க வேண்டுமேயன்றி அரசியல் குற்றமாக பார்க்கும்போது அது பிரச்சினையாகத்தான் வந்து சேரும். இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தீவிரவாதம் என்பது இல்லை. உச்ச நீதிமன்றம் சட்ட புத்தகத்தைப் பார்க்கிறது. ஆனால் மத்திய அரசு வேறு எதையோ பார்க்கிறது.
32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ள நபருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேநேரம், ஜாமீன் என்பது நீதிபதிகளின் கையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுதானேயன்றி, நிரந்தர உத்தரவு அல்ல.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம்: வரைவு அரசியல் சாசன பிரிவு 142-ன் பிரகாரம் நாட்டின் தலையாய நீதித் துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்துக்காவும் அல்லதுநிலுவையில் உள்ள விஷயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்காக தேவையான உத்தரவைபிறப்பிக்க முடியும்.
மேலும்,நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு,உச்ச நீதிமன்றம் இந்தியாவின் முழுபகுதியையும் பொருத்தமட்டில், எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
ஏற்கெனவே பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதுபோல ஜாமீன்வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கிலும் மனிதாபிமான அடிப்படையிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்கியுள்ளனர். இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் தனது கடமையை செய்துள்ளது. இதே அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.