சென்னை: “பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் இந்த வழக்கில் அனைவரும் விடுதலை பெற்றிருப்பார்கள்“ என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. பேரறிவாளன் நெடுங்காலமாக தொடர்ந்து நடத்தி வந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றினார். அவர் நம்மை விட்டு பிரியாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், இந்நேரம் அனைவரும் விடுதலை பெற்று இருப்பார்கள்.
ஆனால், திமுகவினரிடம் நாம் எந்த நல்லவற்றையும் எதிர்பார்க்கமுடியாது. அவர்களுடைய கவனம் முழுவதும் தற்போது மக்கள் நல பணிகளில் இல்லை என்றும், அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றி கொள்வதிலேயே முழு நேரமும் ஈடுபடுவதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.
ஆனால், கடவுள் கண்டிப்பாக கைவிடமாட்டார். ஆண்டவனின் கருணையால் விரைவில் இதில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட்டு அனைவரும் விடுதலை பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.