உக்ரைனில் மனித உள்ளுறுப்புகளை சிதைக்கும் தெர்மோபரிக் வெடிகுண்டை வீசியதாக ரஷ்ய முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
குறித்த ஆபத்தான வெடிகுண்டை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியுள்ளதை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகமும் கூறியிருந்தது.
மட்டுமின்றி உக்ரேனிய உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ரஷ்ய தளபதி ஒருவர், குறித்த ஆயுதத்தை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த தகவலை ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றும் வெளியிட்டுளது. அதில் மார்ச் 4ம் திகதி உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் தெர்மோபரிக் வெடிகுண்டை வீசியதாக ரஷ்ய தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தெர்மோபரிக் குண்டு பயன்படுத்தப்படுவதற்கு முந்தைய நாள், செர்னிஹிவ் பகுதியில் நண்பகலில் ரொட்டிக்காக வரிசையில் காத்திருந்த 47 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தெர்மோபரிக் வெடிகுண்டால் அதிக சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன், பொதுமக்கள் உள்ளுறுப்புகள் சிதைபட்டு மரணமடைய நேரிடும் என்கிறார்கள் இராணுவ நிபுணர்கள்.
உக்ரைன் மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெர்மோபரிக் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது தொடர்பில் உறுதிபட தகவல் வெளியிட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன், ரஷ்ய துருப்புகள் தெர்மோபரிக் வெடிகுண்டை பயன்படுத்தியதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்றே அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெர்மோபரிக் வெடிகுண்டுகள் சட்டவிரோதமானது அல்ல என சர்வதேச சட்டங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மீது பயன்படுத்துவதற்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றிவிடலாம் என களம் புகுந்த ரஷ்ய துருப்புகள், எதிர்பாராத கடுமையான எதிர்த்தாக்குதலால் கோபமடைந்திருக்கலாம் எனவும், அதனாலையே, போரை முடிவுக்கு கொண்டுவர கொடூரமான நகர்வுகளை முன்னெடுட்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.