புதுச்சேரி: மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை ஆட்டோ ஓட்டுநர் பத்திரமாக ஒப்படைத்தார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் தன்னுடைய மருமகளை மருத்துவப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். பின்னர், ஆட்டோவை திருப்பியபோது எதிரில் டூவீலர் நிறுத்தி இருந்த பகுதியில் 500 ரூபாய் நோட்டு கட்டு சாலையில் கிடந்துள்ளது.
அதை எடுத்து பார்த்தபோது அது ரூ.50,000 கட்டு என்பது தெரிந்தது. அப்பணக்கட்டை எடுத்து அதை நேராக அந்த மருத்துவமனை அலுவலகம் சென்று இந்தப் பகுதியில் யாரேனும் பணம் தவற விட்டிருந்தால், இந்த போன் நம்பருக்கு தகவல் தெரிவிக்கவும், என்னிடம் அந்த பணம் உள்ளது என்று கூறி போன் நம்பரை கொடுத்துவிட்டு காளியப்பன் புறப்பட்டார்.
அதே மருத்துவமனையில் பணிபுரியும் காசாளர் ஞானவேல், மருத்துவமனை பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்றபொழுது தவறவிட்டது தெரிந்தது. நீண்ட நேரமாகியும் காசாளர் மருத்துவமனைக்கு வராததால் அவரை மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது பணத்தை தவற விட்டுவிட்டேன்- மார்க்கெட் பகுதியில் தேடி கொண்டிருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பணத்தை கண்டெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனைத் தொடர்புகொண்டனர். அவர் இன்று மாலை மருத்துவமனைக்கு வந்து காசாளர் ஞானவேலை சந்தி்ததார். அவரிடம் தொலைத்த தொகை விவரத்தையும், அதில் இருந்து நோட்டுகளையும் உறுதிப்படுத்திக்கொண்டு அத்தொகையை ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து பரிசு தந்து கவுரவித்தனர்.