திருவனந்தபுரம்: கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அண்டலூர் காவு பரசுராமன் கோயிலில் நடக்கும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவின் போது கிஸ்பு என்னும் வட மாநிலப் பெண் கோயில் வாசலில் அமர்ந்திருந்து பலூன் வியாபாரம் செய்துவந்தார். ஏற்கெனவே ஊதி வைத்திருந்த பலூன்களுக்கு இடையில் கிஸ்பு ஒரு மலரைப் போல் இருப்பதைப் பார்த்த புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன், கிஸ்புவை புகைப்படம் எடுத்தார்.
தான் எடுத்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவரோடு இருந்து பலூன் விற்றுக்கொண்டிருந்த அவரது தாயாரிடமும் காட்ட அவர்களும் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் அனுமதியோடு கிஸ்புவின் படத்தை அர்ஜுன் கிருஷ்ணன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் பதிவிட்ட படங்களிலேயே இதுதான் அதிகமாகப் பகிரப்பட்டதால், கிஸ்புவை வைத்து மாடலிங் போட்டோஷூட் நடத்தவும் முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதித்தனர்.
ஒப்பனைக் கலைஞர் ரம்யா பிரஜூல் கிஸ்புவை, மாடலிங்குக்கு ஏற்ப அலங்காரம் செய்தார். பின்னர் அந்தப் புகைப்படத்தையும், கிஸ்பு பலூன் விற்றுக் கொண்டிருந்த பழைய புகைப்படத்தையும் இணையவாசிகள் ஆச்சரியத் தோடு பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம் கிஸ்புவுக்கு மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. கேரளத்தில் கடந்த வாரம் மம்மிக்கா என்ற 60 வயது கூலித் தொழிலாளி மாடலிங் கலைஞராக அசத்தி னார். இந்த வாரம் பலூன் வியாபாரியான கிஸ்பு மாடலிங் கலைஞராக உருவெடுத்துள்ளார். ஒற்றைப் புகைப்படத்தால் சமூக வலைதளங்கள் மூலம் பலூன் வியாபாரியான கிஸ்பு புகழின் உச்சிக்கே சென்றுள்ளார்.