உத்தர பிரதேச அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி கோலோச்சியது. ஆனால், இந்த தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தம் உள்ள 403 இடங்களில் 1 இடத்தை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 21 சதவீத வாக்குகளை பெற்ற இக்கட்சி, 19 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் 12 சதவீத வாக்குகளை பெற்றுள்ள அக்கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் அக்கட்சிக்கு தொடர்ந்து சறுக்கல்தான் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில்,‘‘பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பிரசாரத்துக்கு செல்லாமல் ஒதுங்கி இருந்ததால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால் ஏராளமானோர் பாஜவை எதிர்க்க சமாஜ்வாடியால் தான் முடியும் என்ற எண்ணத்தில் அந்த கட்சி பக்கம் தாவி விட்டனர். ஆளும் கட்சியின் பல்வேறு நலத்திட்டங்களால் கவரப்பட்ட தொண்டர்கள் பலர் பாஜவுக்கும் வாக்களித்துள்ளனர்,’’ என்றனர்.