"முதல்வரே.. அரே.. அரே".. மண்ணைக் கவ்விய 2 இந்நாள்.. 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

5 மாநில சட்டசபைத் தேர்தலில் 2 இந்நாள் முதல்வர்களும், 5 முன்னாள் முதல்வர்களும் மண்ணைக் கவ்வியுள்ளனர். இதுவரை இப்படி இத்தனை முதல்வர் பதவி வகித்தவர்கள் கூண்டோடு தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி நாடு முழுவதும் பல்வேறு வகையான விவாதங்களைக் கிளப்பியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவிலும் பாஜக ஆட்சியே மீண்டும் அமைகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பஞ்சாப் மாலத்தில் காங்கிரஸ், அகாலிதளம் தவிர்த்து இன்னொரு கட்சி ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கவுள்ள 2வது மாநிலம் பஞ்சாப் ஆகும். ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பல ஆச்சரியங்கள், சோகங்கள், சாதனைகள், வேதனைகள் என கலவையான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அதில் ஒன்றுதான் ஏகப்பட்ட முதல்வர்கள் மற்றும்
முன்னாள் முதல்வர்கள்
தோல்வியைத் தழுவிய சம்பவம்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளார். அதேபோல உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமியும் இந்தத் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். தமி தோல்வியைத் தழுவினாலும் கூட உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கிறது என்பது முக்கியமானது.

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் சிங் ராவத், முன்னாள் பஞ்சாப் முதல்வர்கள் பர்காஷ் சிங் பாதல், அமரீந்தர் சிங் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். அதேபோல முன்னாள் ராஜீவ் கெளல் பட்டாலும் தோல்வியைத் தழுவியுள்ளார்.

கோவாவில் முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலிமாவோ தோல்வியைத் தழவியுள்ளார். இவர் திரினமூல் காங்கிரஸ் சார்பில் பெனாலிம் தொகுதியில் போட்டியிட்டவர். இவரை ஆம் ஆத்மி வேட்பாளர் தோற்கடித்தார்.

இதில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படு தோல்வி அடைய முக்கியக் காரணமே முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் மீது மக்கள் அடைந்த அதிருப்திதான். அதுதான் அக்கட்சியை பழி வாங்கி விட்டது. அதேபோல உத்தரகாண்ட்டிலும் அரசு மீதான அதிருப்தி காரணமாகவே முதல்வர் தமி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் மக்கள் அமர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாநிலத் தேர்தலில் அதிக லாபத்தை சந்தித்திருப்பது பாஜகதான். 4 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம், ஆம் ஆத்மி புதியசக்தியாக இந்த தேர்தலில் உருவெடுத்துள்ளது. காங்கிரஸின் அஸ்திவாரத்தை அது ஆட்டிப் பார்த்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.