மத்திய அரசின் `பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதித்திட்டம்’ மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி பெற்று வருவதாக எழுந்துள்ள புகாரையடுத்து உடனடியாக அதைக் களையும் நடவடிக்கையை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
“முதலில் இதை முறைகேடு என்று சொல்வதே தவறானது. அப்படியே முறைகேடு என்று வைத்துக்கொண்டாலும்கூட அதற்கு பா.ஜ.க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார் விவசாய சங்க பிரதிநிதி ஈசன்.
“ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் இத்திட்டமே ஓர் கண்துடைப்புதான். ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணையாகப் பிரித்து வழங்குகிறார்கள். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தழைத்தோங்கி விடுமா? எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கை அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என 2014-ம் ஆண்டு தேர்தலிலேயே பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், இத்திட்டத்தை செயல்படுத்தி 6,000 ரூபாய் வழங்குவதன் மூலம் அதை மூடி மறைக்கிறது பா.ஜ.க அரசு. எனவே, இத்திட்டத்தின் அடிப்படையே ஏற்புடையதாக இல்லை.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் முறைகேடாகப் பணம் பெற்று வருவதாகக் கூறுகிறார்கள்.
மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்தாயிரத்துக்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறுகிறவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இது இன்றைக்குக் கொண்டு வரப்பட்ட விதிமுறை அல்ல. திட்டத்தை அமுல்படுத்தும்போதே இந்த விதிமுறை இருந்தது.
ஒன்றிய அரசின் சார்பில் இயக்கப்பட்ட இ-சேவை மையங்களுக்கு பா.ஜ.க-வின் விவசாய அணியைச் சேர்ந்தவர்கள்தான் விவசாயிகளைக் கூட்டிச் சென்று இத்திட்டத்தில் சேர்த்தார்கள். வருவாய்த்துறை அலுவலர்கள் கண்காணிப்பில் தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான் இத்திட்டத்தின் பயனாளர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இப்படியிருக்கையில் தகுதியற்ற 30 லட்சத்துக்கும் அதிகமானோர் முறைகேடாகப் பணம் பெற்று வருகிறார்கள் என்றால், இது ஒன்றிய அரசின் தவறுதானே. திட்டத்தில் சேர்க்கும்போதே இவர்கள் தகுதியற்றவர்கள் என்று அரசுக்குத் தெரியாதா? அரசால் இதைக் கண்காணிக்க முடியாதா?” என்றவர், “இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என அரசு நிர்ணயித்திருக்கும் விதிமுறையே தவறானது” என்கிறார்.
“நிலமில்லாத விவசாயி இத்திட்டத்தில் பணம் வாங்கியிருந்தால் அவரைத் தகுதியற்றவர் எனச் சொல்லலாம். நிலம் இருக்கிற விவசாயிகளுக்குதானே பணம் வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயம் செய்கிறவர்கள் வேறு தொழில் மூலம் வருவாய் ஈட்டினாலும் விவசாயத்தில் நஷ்டத்தைத்தான் சந்திக்கிறார்கள். இப்படியிருக்கையில் அவர்களை நிதியுதவி பெற தகுதியற்றவர்கள் என எப்படிச் சொல்ல முடியும்? இப்படியிருக்க, முறைகேடு நடந்துவிட்டது, விவசாயிகள் ஏமாற்றி விட்டார்கள் என்பது போல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் நியாயமற்றது.
2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் எனவும், 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் எனவும் பா.ஜ.க வாக்குறுதி அளித்திருந்தது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே விவசாயிகள் வாழ்வு வளம் பெறும். இந்த 6,000 ரூபாய் நிதியுதவிக்கான தேவையே இருக்காது. அதை நிறைவேற்றாமல் பா.ஜ.க அரசு நாடகமாடிக்கொண்டிருக்கிறது” என்கிறார் ஈசன்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜிடம் பேசினோம்.
“மத்திய அரசின் செயல்பாடுகள் சார்ந்து களங்கத்தை விளைவிக்கும் நோக்கோடுதான் இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இத்திட்டத்தின் பயனாளிகள் வருமான வரி செலுத்தினாலோ, அரசுப்பணி, மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் போன்ற பணிகளில் இருப்பது தெரிய வரும்போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை அரசே திரும்ப எடுத்துக் கொள்கிறது. ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் இணைக்கும்போது இன்னும் தெளிவு கிடைக்கும். அதற்கான பணிகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசின் நோக்கம் ஏழை விவசாயிகளுக்கு இந்நிதியுதவி சென்று சேர வேண்டும் என்பதுதான். அந்த வகையில் தமிழ்நாட்டில் முதலில் 43 லட்சம் விவசாயிகளுக்கு இந்நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. அவர்களில், தகுதியற்றவர்கள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தற்போது 38 லட்சம் விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கு மூலம் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இந்த மிகப்பெரும் சாதனையை முடக்கும் நோக்கிலேயே இது போன்ற புகார்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் திமுக அரசு விவசாயிகளின் வாழ்வு வளம் பெற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கோடுதான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கு தி.மு.க அரசுதான் எதிர்ப்பு தெரிவித்தது. நெல்கொள்முதலைப் பொறுத்தவரை மத்திய அரசு ஒரு கிலோவுக்கு 19.6 ரூபாய் வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசு ஒரு கிலோ நெல்லுக்கு 1.5 ரூபாய்தான் தருகிறது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு 21 ரூபாய் 10 காசுதான் ஒரு கிலோ நெல்லுக்குக் கிடைக்கிறது. அதுவே கேரளாவில் மாநில அரசு 10 ரூபாய் தருகிறது. எனவே, கேரள விவசாயிகளுக்கு 29.6 ரூபாய் கிடைக்கிறது.
மத்திய அரசுதான் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கிறது. மாநில அரசு மத்திய அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே போதும். விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்திருப்போம். அப்படியான முறைகேடு நடைபெற்றால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் வேலை நிதி ஒதுக்குவதுதான் மாநில அரசுதான் அதனை முறையாகக் கண்காணிக்க வேண்டும்” என்கிறார் நாகராஜ்.