யோக்கியகர்தா:இந்தோனேஷியாவில், ‘மெராபி’ எரிமலை வெடித்து, தீக்குழம்பு வெளியேறி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் 250 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், இங்கு, மத்திய ஜாவா – யோக்கியகர்தா இடையே இருக்கும், 2,968 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலை, நேற்று முன்தினம் இரவு வெடித்துச் சிதறியது.அதிலிருந்து கரும்புகையுடன், தீக்குழம்பும் வெளியேற துவங்கியுள்ளது. அது, எரிமலையை சுற்றி வழிந்தோடுவதோடு, அதில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களில் பரவி வருகிறது.இதையடுத்து, சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 253 பேர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எரிமலை வெடிப்பால், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மெராபி எரிமலை 450 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு சூழல்களில், எரிமலைக் குழம்பை வெளியேற்றி வருகிறது. 2010ல் இந்த எரிமலை வெடித்ததில், 347 பேர் உயிரிழந்தனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement