லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் முதன்முறையாக களம் கண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதுவரை இல்லாத நிலையில் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளார். அகிலேஷ் யாதவ் 7,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரது நெருங்கிய போட்டியாளரான பாஜகவின் எஸ்பி சிங் பாகேல் 600க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அகிலேஷ் யாதவின் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும். உ.பி.யின் முன்னாள் முதல்வரான கன்னோஜ் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவை எம்.பி.யாக மட்டுமே இருந்துள்ளார். அவர் முதல்வராக இருந்தபோது சட்டமேலவை உறுப்பினராக மட்டுமே இருந்தார். கர்ஹால் அகிலேஷ் யாதவின் சொந்த ஊராகும்.
அந்த தொகுதியில் 2002-ல் மட்டுமே பாஜக வென்றுள்ளது. மற்றபடி 1993 முதல் சமாஜ்வாடி கட்சியே அங்கு வென்றுள்ளது. அதுபோலவே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து எம்.பி.யாக இருந்த அவர் கடந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரானார். பின்னர் சட்டமேலவை உறுப்பினரானார். தற்போது அவர் தனது கோட்டையான கோரக்பூர் நகர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அவரும் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார்.