லக்னோ:
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் பாஜக, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே, பாஜக ஆட்சியை தக்க வைப்பது உறுதியாகிவிட்டது. பாஜகவின் முன்னணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
அவ்வகையில், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பிற்பகல் நிலவரப்படி யோகி ஆதித்யநாத் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். யோகி ஆத்தியநாத் 51400 வாக்குகள் பெற்றிருந்தார். சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லா 17368 வாக்குகள் பெற்றிருந்தார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கவாஜா ஷம்சுதீன் 3319 வாக்குகளும், ஆசாத் சமாஜ் கட்சி வேட்பாளர் சந்திர சேகர் 2754 வாக்குகளும் பெற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சேத்னா பாண்டே 740 வாக்குகள், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் விஜய் குமார் 243 வாக்குகள் பெற்று பின்தங்கியிருந்தனர்.
யோகி ஆதித்யநாத் வெற்றியை நெருங்கிய நிலையில், கோரக்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.