ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டசபையில் நேற்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் பேசும்போது, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானாவில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
மேலும், பிரதமர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உத்தர பிரதேச பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
அமைச்சரின் இந்த கருத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த விவகாரம் இன்றும் சட்டசபையில் எதிரொலித்தது. எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா இந்த விவகாரத்தை எழுப்பி கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் சாந்தி தாரிவால் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் அமைச்சர் கூறிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். ராஷ்டிரிய லோக்தந்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் புக்ராஜ் மற்றும் நாராயண் பெனிவால் ஆகியோர் சில பேப்பர்களை எடுத்து காட்டினர். இதற்கு சபாநாயகர் ஆட்சேபம் தெரிவித்ததுடன், போஸ்டர்களோ, பேனர்களோ அவைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவுறுத்தினார். இதனை எம்எல்ஏக்கள் இருவரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, அவர்களை வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அத்துடன் அவை நடவடிக்கைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படியுங்கள்… பிரியங்கா பிரசாரம் கைகொடுக்கவில்லை- காங்கிரசுக்கு கடும் பின்னடைவு