உத்தரப்பிரதேச மாநிலம்
லக்கிம்பூர்
கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் மீது, மத்திய இணை அமைச்சர் மகனின் கார் ஏறி கொல்லப்பட்டதற்கான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக லக்லிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்
பாஜக
வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, பிரச்சினைக்குள்ளான லக்கிம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் வர்மா 12733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதே லக்கிம்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் வர்மா 37,748 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் உத்கர்ஷ் வெர்மா மதூரை தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.