புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வாரணாசி மாவட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி முகம் கண்டுள்ளது. இதன்மூலம், அதன் மக்களவை தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடியின் கவுரவத்தை காசிவாசிகள் காத்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது வாரணாசி. இதன் எட்டு தொகுதிகளுக்கு கடைசிகட்டத் வாக்குப்பதிவில் நடைபெற்ற தேர்தல், பிரதமர் மோடிக்கு சவாலானது. இதற்கு அங்கு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தனர். சமாஜ்வாதிக்கு ஆதரவாக மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜியும் வாரணாசிக்கு வந்திருந்தார். காங்கிரஸின் தலைவர்களான ராகுல் காந்தியுடன், பிரியங்கா வத்ராவும் வந்திருந்து காசி விஸ்வநாதர் கோயில் பூசைக்கு பின் பிரச்சாரம் செய்தனர். இதற்கும் முன்பாக வாரணாசியில் தலித் சமூக துறவியான சந்த் ரவி தாஸ் பிறந்த கோவர்தன்பூருக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் வந்து அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டனர்.
இதனால், குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேசத்தில் தன் மக்களவைத் தொகுதியான வாரணாசி வெற்றி கேள்விக்குறியானது. எனவே, இங்கு மூன்று நாள் தங்கி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்திருந்தார். இதில் எப்போதும் இல்லாத வகையில் இரவில் கிளம்பி ரயில்நிலையம் சென்றி பயணிகளைச் சந்தித்தார். வாரணாசி வீதியின் சாலையோர கடையில் தேநீர் ருசித்து, பீடாவையும் சுவைத்தார். பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து சாதாரணமாகக் கலந்துரையாடினார். இவருக்கு முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத்சிங், தர்மேந்தர் பிரதான் மற்றும் பாஜகவின் தலைவரான ஜே.பி.நட்டா ஆகியோரும் பிரச்சாரம் செய்திருந்தனர்.
இதன் பலனாக, வாராணசியின் ஒன்பது தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி முகம் கண்டுள்ளனர். இங்கு பிரதமர் மோடியின் கவுரவத்தை காத்த காசிவாசிகள், அதன் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். வாராணசி தொகுதிகளின் வெற்றி தாக்கம், அதை சுற்றியுள்ள ஜோன்பூர், காஜிபூர், மிர்சாபூர், பலியா, சண்டவுலி, சோன்பத்ரா மற்றும் பதோஹி ஆகிய மாவட்டங்களில் கிடைக்கும் என பாஜக எதிர்நோக்கி உள்ளது.