நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ரிலீஸ் என்பதால், அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே விஜய் அடுத்ததாக வம்சி பைடிபலியின் இயக்கத்தில் கமிட் ஆனார்.
இயக்குநர் வம்சி, தமிழ் ரசிர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். நாகார்ஜூனா, கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தின் மூலம் இங்கே அடியெடுத்து வைத்தார். அதன் வசனங்களை எழுதிய ராஜூமுருகன், முருகேஷ்பாபு இருவரும்தான் மீண்டும் வம்சியுடன் கை கோர்க்கிறார்கள்.
விஜய் படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி கமிட் ஆகியிருக்கிறார். பிரபாஸின் ‘ஆதி புரூஷ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சமீபத்திய ‘புஷ்பா’ ஹிட்டினால் ராஷ்மிகாவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
விஜய்யின் சென்டிமென்ட்டாக முதன்முதலில் சென்னையில்தான் படப்பிடிப்பு நடக்கிறது. பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டூடியோவில் பிரமாண்ட வீடு ஒன்றை செட் அமைத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடந்த கோகுலம் ஸ்டூடியோவிலும் செட் அமைத்து உள்ளனர். இதில் விஜய் – தோனி சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.
படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் தொடர்ந்து ஹிட்கள் கொடுத்து வருகிறார் தமன். விஜய்யிடம் வம்சி இந்தப் படத்திற்கான கதையை சொன்னதும், ‘கடந்த 20 வருஷத்துல இப்படி ஒரு கதையை கேட்டதில்ல. அருமையான கதை இது’ எனச் சொல்லி சிலிர்த்திருக்கிறார் விஜய்.
சென்னையில் முதன்முதலாக விஜய் – ராஷ்மிகா காம்பினேஷனில் பாடல் ஒன்றை படமாக்க உள்ளனர். அதற்கான பாடலை தமன் ஏற்கெனவே போட்டுக் கொடுத்துவிட்டார். அரங்கப் பணிகள் நிறைவு பெறுவதை பொறுத்து இந்தப் பாடல் ஷூட்டை மட்டும் இம்மாதம் 23ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை செட்கள் அமைக்கும் வேலைகளுக்கு மேலும் நாள்கள் தேவைப்படும் பட்சத்தில் வருகிற மாதம் ஏப்ரல் 2 சங்கராந்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் ஹைதராபத்தில் நடக்க உள்ளதாம். தீபாவளி ரிலீஸை நோக்கி திட்டமிட்டு வருகிறார்கள். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமும் தீபாவளி வெளியீடு என்கிறார்கள், ஆக, இந்தத் தீபாவளி அஜித் – விஜய் ரசிர்களுக்கு ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கப் போகிறது.