சண்டிகர்: விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் முதல்வராக பதவியேற்பேன் என பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. 117 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் ஏறத்தாழ 90 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 70 ஆண்டுகாலமாக அகாலிதளம், காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் கோலூன்றி வந்த மாநிலத்தில், இரண்டு கட்சிகளையும் புறந்தள்ளி ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சியின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான், டிவி சேனல்களில் காமெடி கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான பகவந்த் மான்.2014ல் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி குறித்து பகவந்த் மான் கூறுகையில், ‛முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனில் நடக்காது. அதற்கு பதிலாக, பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன். பஞ்சாபில் இனி அரசு அலுவலகங்களில் முதல்வர்களின் படங்கள் இருக்காது; பகத்சிங், அம்பேத்கரின் படங்கள் இருக்கும்,’ எனக் கூறினார்.