மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ. இவர் மகன் ராகேஷ், பணி நிமித்தமாக நண்பர் வேத விகாஸ் என்பவருடன் கார் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே சென்று கொண்டிருந்த போது, அதிகாலை சுமார் 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக சாலை மத்தியில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் வேத விகாஸ், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்ததால், ராகேஷின் உடல் இடற்பாடுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டது. அதனால் அவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடலை மீட்பதற்காக தொடர்ந்து போராடிய தீயணைப்புத் துறையினர், காரின் பாகங்களை அறுத்து எடுத்து ஜே.சி.பி இயந்திர உதவியோடு அகற்றிய பின்னர், சுமார் 7 மணி அளவில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து, கோட்டக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் கோட்டக்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சனிடம் பேசினோம். “ராகேஷ், அவர் நண்பர் வேதவிகாஷ் இருவரும் காரில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்துக்கொண்டிருந்த போது அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் வேதவிகாஸ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார்.
மேலும், அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.