புதுச்சேரி-புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பள்ளி மாணவர்களின் சுகாதாரம் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.இந்த திட்டம், ஆக்சிஸ் வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர். கவர்னர் தமிழிசை, இணைய சேவையை துவக்கி வைத்தார். கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் சுகாதாரம் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்பணி இந்தியாவிலேயே முதல்முறையாக, இங்கு துவக்கப் பட்டுள்ளது.சுகாதார அமைப்புகளின் அறிக்கைப்படி, உலகில் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை துவக்கத்திலேயே கண்டறிந்து, வளரும்போது அவற்றை சரி செய்ய, சுகாதாரப் பதிவு உதவியாக இருக்கும்.எனவே அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து, தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு கல்வி பதிவேடு பராமரிப்பதை போலவே சுகாதார பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும்.பிரதமரின் ‘ஸ்வச் பாரத்’ இயக்கத்திற்கு பின் நோய்த்தொற்று பெருமளவு குறைந்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய கவனம் செலுத்தினால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கும், கல்வியில் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.குறிப்பிட்ட காலத்திற்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து குழந்தைகளின் சுகாதாரம் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். புதுச்சேரியில் மொத்தம் 2. 40 லட்சம் குழந்தைகளின் சுகாதார தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும்.இத்தி்ட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யும் போது, தாய்க்கும் இருக்கும் குறைபாடுகளை கண்டறிய முடியும். இந்த திட்டம் பல்கலைக்கழகத்துக்கும் விரிவுபடுத்தப்படும்.புதுச்சேரியில் குழந்தை பெற்ற பெண்களுக்கு பரிசு பெட்டகம் வழங்குவதற்கு, முதல்வருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன், மாணவர்களுக்கு மணிலா கேக் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் ஆரோக்கியமான புதுச்சேரியை உருவாக்க முடியும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.இந்த திட்டத்தின் கீழ், மருத்துவக் குழுவினர் மாணவர்களை பரிசோதித்து, அறிக்கை அளிப்பர். அதில் உள்ள விபரம் அனைத்தும், இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்டூடன்ட் ஹெல்த் போர்ட்டல்’ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இப்பணியை சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகள் இணைந்து மேற்கொள்ள உள்ளன. இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களை இவ்விரு துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Advertisement