ஆம் ஆத்மியின் மற்றொரு கோட்டையாக மாறியிருக்கிறது பஞ்சாப். 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி 90 ப்ளஸ் இடங்களை வசப்படுத்துகிறது. இவ்வளவு பெரிய வெற்றிக்கான விதை இன்று, நேற்று போடப்பட்டதல்ல… 2014-ம் ஆண்டிலேயே இந்த வெற்றியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. சொல்லப்போனால், தனது கோட்டை எனப்படும் டெல்லிக்கு முன்பே பஞ்சாப்பில் அடித்தளத்தை அமைத்தது ஆம் ஆத்மி.
2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. நாடு முழுவதும் மோடி அலை வீசப்பட்டதாக சொல்லப்பட்ட நேரத்தில்தான், அந்த அலைக்கு மத்தியில் ஆம் ஆத்மி தனது அரசியல் வாழ்க்கையில் ‘அ’ போடத் தொடங்கியது. நாடு முழுவதும் போட்டியிட்ட 434 இடங்களில் 4-ல் மட்டுமே வெற்றி. அந்த நான்கு தொகுதிகள் ஆம் ஆத்மியின் கோட்டையான டெல்லியில் இல்லை. நான்குமே பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற வெற்றிகள். இதன்பின்னர் தான் டெல்லி வெற்றி எல்லாம். பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் என்ட்ரி அதுதான். அதன்பின் பஞ்சாப்பில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஆம் ஆத்மிக்கு ஏறுமுகமே. 2014-ல் ஆம் ஆத்மியை உலகிற்கு அறிமுகப்படுத்திய அந்த வெற்றிக்கு அடுத்தே பஞ்சாப்பில் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கினார் அக்கட்சியின் தலைமகன் அரவிந்த் கேஜ்ரிவால்.
அடிமட்ட ரீதியில் கட்சியை ஆம் ஆத்மி பலப்படுத்திய சமயத்தில்தான் 2017-ல் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பஞ்சாப்பில் ஆட்சி அதிகாரத்தை பாரம்பரியமாக வைத்திருந்தது சிரோன்மணி அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகள்தான். இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்தபோதே முதல்வர் வேட்பாளர் இல்லாமல் தைரியமாக தேர்தல் களம் கண்டது ஆம் ஆத்மி. இதற்கு காரணம், 2015-ல் டெல்லியில் பெற்ற வெற்றியும், அந்த வெற்றியால் குறைந்த நாட்களிலேயே உருவாக்கி வைத்திருந்த டெல்லி மாடலும்தான். ‘டெல்லி மாடல்’ பிரச்சாரத்தை காங்கிரஸ், அகாலி தளம் கட்சிகளின் ‘பவர்ஃபுல்’ பிரச்சாரத்துக்கு மத்தியில் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார் கேஜ்ரிவால். 2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, ஆம் ஆத்மிக்கு மீண்டும் கிடைக்காது என்ற பலரும் நினைத்துக்கொண்டிருக்க, அந்த எண்ணத்தை தவறு என உணரவைத்தது ஆம் ஆத்மி. பஞ்சாப்பில் எதிர்கொண்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
அப்போதே கேஜ்ரிவால் ‘பஞ்சாப்பின் எதிர்காலம் ஆம் ஆத்மி’ என்று முழக்கமிட்டார். வெறும் முழக்கத்தோடு இல்லாமல் அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டார். இப்போது நடந்த தேர்தலுக்கு சரியாக இரண்டு ஆண்டுகள் முன்பே பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் தேர்தல் களப்பணி தொடங்கியது. 2017 வெற்றி எதிர்க்கட்சியாக அமரவைத்தாலும், கட்சியில் இருந்து கருப்பு ஆடுகள் தலைகுனிவை ஏற்படுத்தின. சாட்டையை சுழற்றி, அவற்றை முதலில் களையெடுத்தார் கேஜ்ரிவால். தொடர்ந்து கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தினார்.
டெல்லி மாடல்:
பஞ்சாப் மக்களுக்கு பரிச்சயமான மாநிலம், ஏன் இன்னொரு பூர்விகம் என சொல்லும் அளவுக்கு டெல்லி, அவர்களின் வாழ்க்கையில் கலந்த ஓர் இடம். இதனால், டெல்லியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களுக்கு அத்துப்படி. அது டெல்லியில் நடைபெற்று வரும் கேஜ்ரிவால் ஆட்சி குறித்தும்தான். கேஜ்ரிவால் மூன்றுமுறை டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற உதவியது அவரின் ‘டெல்லி மாடல்’தான். டெல்லி மாடல் ஆடம்பரங்களை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி, இலவச சுகாதாரம், மின்சாரம் மற்றும் மலிவான விலையில் தண்ணீர் என்ற நான்கு முக்கிய விஷயங்களை முன்னிறுத்தியது. இதை அப்படியே பஞ்சாப்பில் இம்பிளிமென்ட் செய்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மிக முக்கிய குற்றச்சாட்டு மின்வெட்டு. இதை கையிலெடுத்த கேஜ்ரிவால், பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என்றார். அதோடு, குடும்பப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய், மாநிலத்தில் 16,000 சிறிய மருத்துவ கிளீனிக், புதிய வேலைவாய்ப்புகள், இதுவரை பஞ்சாப்பை ஆண்ட கட்சிகள் புறக்கணித்த மற்றொரு விஷயமான துணை முதல்வராக பட்டியிலன பிரதிநிதி ஆகிய வாக்குறுதிகளை கொடுத்து மக்களை இம்ப்ரஸ் செய்யத் தொடங்கினார்.
கைகொடுத்த எதிர்க்கட்சிகளின் சரிவுகள்:
ஒருபக்கம் தங்களின் வாக்குறுதிகளால் ஆம் ஆத்மி ஸ்கோர் செய்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு கைகொடுத்தது எதிர்க்கட்சிகளின் பலவீனம் எனலாம். ஆட்சியின் இறுதி காலத்தில் காங்கிரஸ் தனக்கே உரித்தான கோஷ்டி சண்டையில் மும்முரமாகியது. சித்து இடையேயான மோதலால் பஞ்சாப் காங்கிரசின் முகமாக அறியப்பட்ட அமரீந்தர் சிங் கட்சியை விட்டே வெளியேறினார். அதேநேரம், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களால் பாஜகவும் பஞ்சாப்பில் தங்கள் இருப்பை கேள்விக்குறியாக்கி கொண்டிருந்தது. அகாலி தளம் செயல்பாடே இல்லாமல் முடங்கி போனது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது ஆம் ஆத்மி. களத்தில் ஒரு எதிர்க்கட்சியாக தனது குரலை வலுவாக பதியவைத்து பஞ்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் ஒரே கட்சி என தங்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்றது.
காங்கிரஸ் ஆட்சியில் மாஃபியாக்கள் அட்டூழியம் பஞ்சாப் மக்களை ஒருவழி செய்தது என்ற குற்றச்சாட்டு உண்டு. மணல் மாஃபியா தொடங்கி அனைத்திலும் மாஃபியாக்கள் உருவாகினர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இதைவிட போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்தது. ஆளுங்கட்சியாக அதைத் தடுக்க தவறிய காங்கிரஸ், அதைக் கண்டுகொள்ளாமல் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப்பை கனடாவாக, கலிபோர்னியாவாக மாற்றுவோம்’ என்றது.
மக்களின் எண்ணங்களை உணர்ந்த ஆம் ஆத்மி இந்தக் குறைகளை சுட்டிக்காட்டி, ‘நாங்கள் பஞ்சாப்பை கனடாவாக, கலிபோர்னியாவாக மாற்றப்போவதில்லை. பழைய பஞ்சாப்பையே மீட்டெடுப்போம். போதைப்பொருள் மாநிலத்தில் ஒழிக்கப்படும்” என வீதி வீதியாக முழங்கியது.
முதல்வர் முகம்:
2017 தேர்தலில் ஆம் ஆத்மி எதிர்கொண்ட முக்கியப் பிரச்னை அதன் முதல்வர் வேட்பாளர்தான். ஒரு வேகத்தில் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களமிறங்கினாலும், அதை அறிவிக்காததன் விளைவை அதன் பின்பே எதிர்கொண்டது. இந்தமுறை அந்த தவற்றை செய்யாமல் இருக்க நினைத்த ஆம் ஆத்மி, சோனு சூட் முதல் பலரை முதல்வர் வேட்பாளருக்காக நீண்ட நெடிய பரிசீலனையை செய்தது. இறுதியாக இரண்டுமுறை எம்.பி-யாகவும், பஞ்சாப் ஆம் ஆத்மி மாநிலத் தலைவராகவும் இருந்த பக்வந்த் மான் முதல்வர் முகமாக அறிவித்தது. 2014 தேர்தலில் பஞ்சாப்பில் வெற்றிபெற்ற நான்கு எம்பிக்களில் பக்வந்த் மானும் ஒருவர்.
நடிகராக இருந்து அரசியல் களம்கண்ட பக்வந்த் மான் தனது அரசியல் நையாண்டிகளால் பஞ்சாபிகள் மத்தியில் தனி இடம்பெற்றுள்ளார். இவர் மீது மதுப்பழக்கம், நாடாளுமன்றச் சர்ச்சை என குற்றச்சாட்டுகள் நிறைய இருந்தாலும், தேர்தலுக்கு முன்பாக ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வருவதையும், ஒவ்வொரு தேர்தலிலும் தனது சொத்து மதிப்பு எப்படி குறைந்து வருகிறது என்பதையும் பிரச்சாரத்தில் பேசி மக்கள் மனதில் சென்டிமென்ட்டாலாக டச் ஆனார்.
இவை எல்லாம் ஒருசேர கைகொடுக்க, பஞ்சாப்பில் சந்தித்த இரண்டாவது சட்டசபை தேர்தலிலேயே அரியணை எறுகிறது ஆம் ஆத்மி. 2012-ல் கட்சி ஆரம்பிக்கும்போது ஆம் ஆத்மியின் முழக்கம், ‘பாஜக, காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்’ என்பதாகத்தான் இருந்தது. அந்த முழக்கம் இப்போது உண்மை ஆகாமல் இருக்கலாம். ஆனால், அதற்கான அடியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைக்கிறது என இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் புரியவைப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.