டேராடூன்:
70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 14-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 65.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கூட்டணி என 4 கட்சிகள் களத்தில் இருந்தாலும் உத்தரகாண்டில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவியது. மொத்தம் 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இங்கு பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி காணப்பட்டது. இரு கட்சிகளும் சம அளவில் முன்னிலை பெற்று வந்தது.
இதே நிலை தொடர்ந்து நீடிக்கலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல பா.ஜனதாவின் கை ஓங்கியது. காங்கிரசால் அதற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
காலை 11.00 மணி நிலவரப்படி பா.ஜனதா 42 இடங்களில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் 24 இடங்களிலும், சுயேட்சைகள் மற்றும் பிற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி கட்சி உத்தரகாண்டில் 70 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. பா.ஜனதா 42 இடங்கள் வரை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
இதனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கிறது. 21 ஆண்டு கால உத்தரகாண்ட் வரலாற்றில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது முறையாக அங்கு ஆட்சியை பிடிக்கிறது.
2000-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உதயமானது. அங்கு காங்கிரஸ் ஏற்கனவே தொடர்ந்து 2 முறை ஆட்சியை கைப்பற்றி இருந்தது. ஆனால் பா.ஜனதா தற்போது தான் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.
அங்கு புஷ்கர்சிங் தாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரே மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.