திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய சிப்காட் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில், சிப்காட் அமையவிருக்கும் இடம் குறித்து தற்போது வரை அரசு தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், செங்கம் தொகுதிக்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி புதிய சிப்காட் அமைய இருப்பதாக கசிந்த உறுதியற்ற தகவலைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து `சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்’ என ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு கசிந்ததாகக் கூறப்படும் தகவலின்படி, சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி சிப்காட் அமையவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி சிப்காட் அமைந்தால், 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளும், இயற்கை வளங்களும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.
மனு கொடுத்தல், சாலை மறியல், தொடர் காத்திருப்பு போராட்டம், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடுவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதிலை பெறுவதற்கு கூட்டாக மனு கொடுப்பது என பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தனர். ஆனால், அரசு தரப்பு அம்மக்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காததால் போராட்டத்தின் 50-ம் நாள் அன்று, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக, இந்த போராட்டம் 75-ம் நாள்களைக் கடந்துள்ளது.
அதனை அதிகாரிகளின் கவனம் சேர்க்கும் விதமாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மலை சுற்றும் போராட்டம் நடத்தியுள்ளனர். இயற்கையை வணங்கிவிட்டு இந்த போராட்டத்தை துவங்கியவர்கள், `விளை நிலத்தை அழித்து சிப்காட் வேண்டாம்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி வளம் வந்துள்ளனர். “குடியிருப்புகளையும், விவசாய விளைநிலங்களையும், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் அழித்து சிப்காட் அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிடும்வரை நாங்கள் தொடர்ந்து போராட உறுதியேற்றுள்ளோம்… போராடுவோம்” என்கிறார்கள் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேச முயற்சி செய்தோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.