உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து முடிந்த நிலையில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தொடங்கியது. உத்தராகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.
கருத்துக்கணிப்புகள் பலிக்குமா? – 5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2017-ல் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதன் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான முடிவுகள் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்துகின்றன.
சிறிய மாநிலமான கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் ஆட்சியமைக்கும் நடவடிக்கையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என பெரும்பான்மையான முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கருத்துக்கணிப்பின்படி பாஜக மணிப்பூரை தக்க வைக்கிறது. பாஜக 32-38 இடங்களையும், அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 12-17 இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
அதிகம் எதிர்பார்க்கப்படும் உ.பி. முடிவு: உத்தரப் பிரதேச தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஆகையால் இந்த மாநில தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பாலான ஊடகங்கள் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
# டைம்ஸ் நவ்-வீட்டோ : பாஜக 225, சமாஜ்வாதி 151, பகுஜன் சமாஜ் 14, காங்கிரஸ் 9
# நியூஸ் 18-பிமார்க் : பாஜக 240, சமாஜ்வாதி 140, பகுஜன் சமாஜ் 17, காங்கிரஸ் 4
# இண்டியா டுடே: பாஜக 288-326, சமாஜ்வாதி 71-101, பகுஜன் சமாஜ் 3-9, காங்கிரஸ் 1-3
கருத்துக்கணிப்புகளின் படி உ.பி.யில் பாஜக ஆட்சி அமையுமா? கடந்த தேர்தலை விட பாஜகவின் வாக்குவங்கி எவ்வளவு சரியும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த வாக்குவங்கி சரிவை எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிரான அடுத்தடுத்த பிரச்சாரங்களில் பிரத்யேக உத்தியாகக் கையில் எடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.