தூத்துக்குடியில் புதன்கிழமை காலை விமானத்தில் ஏறிய அரசுப் பள்ளியில் படிக்கும் 21 ஏழை மாணவர்களுக்கு அதுதான் முதல் விமானப் பயனம். அந்த மாணவர்களால் தாங்கள் விமானத்தில் பறக்கப்போகிறோம் என்பதை நம்பமுடியவில்லை. ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வரும் 21 ஏழை மாணவர்களையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தனது சொந்த செலவில் விமானத்தில் அனுப்பிவைத்து அவர்களை லட்சியக் கனவில் மிதக்க வைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள வி. விஷ்ணு ஐ.ஏ.எஸ், 2012ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். விஷ்ணு திருச்சிராப்பள்ளி, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர். இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு, அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஆயன் என்ற நிறுவனத்தில் இடர் ஆய்வாளராக பணியாற்றியிருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டிற்கான பெருமைமிக்க மற்றும் சவாலான பாரத பிரதமரின் ஊரக வளர்ச்சித்துறை விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்திய ஆட்சிப் பணி தேர்வில் அகில இந்திய அளவில் 34-வது ரேங்கில் தேர்வானார்.
தற்போது வி. விஷ்ணு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். சேரன்மகாதேவி கோட்டத்தில் சார் ஆட்சியராக இந்திய ஆட்சிப் பணியைத் தொடங்கியவர். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அலுவலராகவும், சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் செயல் இயக்குநராகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநராகவும் பணியாற்றி, தமிழ்நாட்டில் வேலையில்லா இளைஞர்களை வேலைக்கு தகுதிவாய்ந்தவர்களாக மாற்றும் மிக முக்கியமான பணியினை மேற்கொண்டார்.
2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஈசன்ஹோவர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நடுத்தர அலுவலர்களில் இவர் மட்டுமே இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் திருச்சிராபள்ளி, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இளம் மாணவர் சாதனையாளர் விருதினையும் பெற்றிருக்கிறார்.
குழந்தைகள் மத்தியில் நிலவும் போதை பழக்கத்தை தடுத்தல்/சட்ட விரோத போதை பொருள் கடத்தல் தடுப்புதிட்டத்தினை திறம்பட செயல்படுத்தியமைக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கான சிறப்பு விருதை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு பெற்றுள்ளார். தற்போது மார்ச் 18ம் தேதி தொடங்க உள்ள பொருநை புத்தகத் திருவிழாவுக்கான பணியை மேற்கொண்டு வருகிறார்.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட நெல்லை ஆட்சியர் வி. விஷ்ணு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லணை, சேரன்மாதேவி, முனாஞ்சிப்பட்டி, களக்காடு, ஏருவாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 21 அரசுப் பள்ளி ஏழை மாணவர்களை சென்னைக்கு கல்விச் சுற்றுலா செல்ல தனது சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் வி விஷ்ணு, 21 அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள், இரண்டு நாட்கள் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிஎம் பிர்லா கோளரங்கம் ஆகியவற்றை கல்வி சுற்றுலா செல்ல தனது சொந்த செலவில் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தார்.
அந்த 21 அரசுப்பள்ளி மாணவர்களும் தூத்துக்குடியில் புதன்கிழமை காலை விமானத்தில் ஏறினர். இந்த மாணவர்கள் அனைவருக்கும் இதுதான் முதல் விமானப் பயனம் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சுந்தர் ராஜேஷ் என்ற மாணவர், சென்னையில் தரையிறங்கிய பிறகு, நாங்கள் விமானத்தில் பறப்போம் என்று எதிர்பார்க்கவில்லை, தங்கள் கனவுகளில் ஒன்றை நிறைவேற்றிய கலெக்டருக்கு நன்றி என்று கூறினார். அந்த மாணவர், இப்போது ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி-மெட்ராஸில் சேர விரும்புவதாகக் கூறினார்.
பொதக்குடி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி செல்வநாயகி கூறுகையில், நாங்கள் கல்விப் பயணமாக இங்கு வந்துள்ளோம், எங்களைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இந்த முயற்சியை மேற்கொண்ட கலெக்டருக்கு நன்றி என்று கூறினார்.
ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகிவரும் அரசுப் பள்ளி ஏழை மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு தந்து சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்து அவர்களை லட்சியக் கனவில் மிதக்க வைத்துள்ளார் நெல்லை கலெக்டர் விஷ்ணு. அவருக்கு பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டுதலை தெரிவித்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“