சென்னை: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது என மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு இயற்றியுள்ள 2021-ம் ஆண்டின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையி்ல் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசின் நீர்வளத் துறைதுணை ஆணையர் ரவிநாத்சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கண்காணிப்பு, அபாயகர விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பாலான அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால் அணைகள் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்துக்கு மட்டுமின்றி மற்றமாநிலங்களுக்கும் முக்கியமானது. ஒவ்வொரு மாநிலமும் தங்களதுஎல்லையைத் தாண்டி அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்பதால் நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி பெரிய அணைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய நதிநீர் ஆணையத்தின் மூலமாக மத்திய அணை பாதுகாப்பு அமைப்பும், அணை பாதுகாப்புக்கான மத்திய குழுவும் அமைக்கப்படும். இச்சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது. இரு அமைப்புகளிலும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என தெரி வித்துள்ளார்.
இந்த பதில்மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.