சேலத்தில் பா.ஜ.க மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. நாங்கள் வெற்றிபெற கூடாது என்று அந்நிய சக்திகள் செய்த சதியை வென்று காட்டியுள்ளது பா.ஜ.க.
டெல்லியில் நடைப்பெற்ற விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்டி அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மக்களிடையே எங்கள்மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தின. மத்திய அமைச்சருடைய மகன் பெயரிலேயே கொலை குற்றத்தை சாட்டினார்கள். ஆனால், மக்களுக்கு தெரியும் யார் உண்மையானவர்கள் என்று அதனுடைய எதிரொலியே இந்த வெற்றி.
தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க எனும் அந்நிய சக்தியை பயன்படுத்தி பா.ஜ.க-வை களங்கப்படுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இங்கே இருக்கிற கோடி ரூபாய் பணத்தை கொண்டுபோய், துபாயில் பதுக்குவதற்காகவே அயலக செயல்பாட்டு அணி உருவாக்கியிருக்கிறார்கள் தி.மு.க-வினர்.
அப்படிப்பட்ட ஒரு அணி இதுவரையில் எந்த கட்சியிலும் கிடையாது. ஆகவே இவர்கள் இரண்டாவது பிசினஸ் எங்கெல்லாம் தொடங்களாம் என்று துபாய், லண்டன் போன்றவற்றில் உறுப்பினர்கள் சேர்த்து வருகின்றனர்.
சேலத்தில் தி.மு.க எப்படி ஜெயித்தது என்று எங்களுக்கு தெரியாதா, தேர்தல் நேரத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கே.என்.நேரு, எந்தெந்த அதிகாரிகள் மூலம் எவ்வளவு பணம் பட்டுவாடா செய்தார் என்கிற பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம்” என்று கூறினார்.