விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு வீட்டில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கல கழிவு (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயல்வதாக ரோசனை காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (9.03.2022) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரோசனை உதவி ஆய்வாளர் அருள்தாஸ், திண்டிவனம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மதியம் சுமார் 12.30 மணி அளவில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் மோகனரங்கன் என்பவரது வீட்டினுள் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மோகனரங்கனுடன் கையில் பையை ஏந்தியபடி வெளியே வந்துள்ளனர் அந்த நான்கு நபர்கள். அப்போது 5 பேரையும் மடக்கி பிடித்த காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் இருந்தது திமிங்கலத்தின் கழிவுகள் என்றும், அரசால் தடைசெய்யப்பட்ட இதனை சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்ததில், அதில் மூன்று பேர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், முருகன், லட்சுமிபதி என்பதும் ஒருவர் திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பதும் திண்டிவனத்தை சேர்ந்த மோகனரங்கன் வீட்டிலிருந்து திமிங்கலத்தின் இந்த கழிவு பொருட்களை கடத்தி செல்ல முயன்ற போது பிடிபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவ பயன்பாட்டிற்காகவும், வாசனை பொருட்கள் தயாரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இந்த விலை உயர்ந்த திமிங்கல கழிவுகள், பிடிபட்டது தொடர்பாக திண்டிவனம் நகர கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் முன்னிலையில், பிடிபட்ட திமிங்கல கழிவுகளை எடைபோட்டு அளவீடு செய்துள்ளனர் காவல்துறையினர்.
இதில் தேன் நிறத்தில் இருந்த இரண்டு கட்டிகள் சுமார் 10 1/4 கிலோ அளவிலும், கருப்பு நிறத்தில் இருந்த பிசின் போன்ற மூன்று கட்டிகள் 4.5 கிலோ அளவிலும் என மொத்தம் சுமார் 14.75 கிலோ அளவில் இருந்துள்ளது. இந்த திமிங்கல கழிவுகளையும், இதனை கடத்துவதற்காக பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இச்சம்பவம் வனத்துறைக்கு சம்பந்தப்பட்டது என்பதால் வனச்சரக அலுவலருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட ஐந்து நபர்களுக்கும் முதல் மாடியில் வைத்து உணவு வழங்கியுள்ளனர் போலீஸார்.
அப்போது மோகனரங்கன் என்பவர் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக பால்கனி பகுதிக்கு சென்று, உடனடியாக தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அப்போது பால்கனியில் இருந்து குதித்த அவருக்கு இடதுபுறமாக கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட ரோஷணை காவல்துறையினர், சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடனே மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறாராம் அந்த நபர்.
அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல கழிவு அம்பர் கிரிஸ் திண்டிவனத்தில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.